குரிவெல ஹமீதியா கல்லூரி

வரலாறு

நோன்பு விடுமுறை

நோன்பு விடுமுறை கால வகுப்புகள்

பொதுப் பரீட்சைகள் - 2024

பாடசாலை தவணை அட்டவணை - 2024

இலவச சீருடை விநியோகம்

inslide9.jpg
inslide11.jpg
sp1.jpg

காடுகளும் மலைகளும் சூழ நதிமகள் வலய  வரும் ஒரு அழகியச்  சூழலில் அமைந்துள்ள கல்விக்கூடமே ஹமீதியா கல்லூரி ஆகும்.  77 வருடங்களாக நீண்டதொரு வரலாற்றில் கொண்டுள்ள இக்கல்லூரியின் பூர்வீக வரலாற்றை எடுத்து நோக்கும் போது குரிவெல பிரதேச முஸ்லிம்களுக்கு என தனிப்பாடசாலை ஒன்று காணப்படாதவிடத்து இப்பிரதேசத்தில் இயங்கி வந்த சிங்கள வித்யாலயத்தின் அருகிலான ஒரு சிறிய நிலப்பரப்பில் தற்காலிக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு கல்வி அமைச்சின் அனுமதியுடன் 1947.01.06 அன்று ஆரம்பமான இப்பாடசாலை அப்போது அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரில் ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கதாகும்.

எனினும் தமிழ் மொழி மூல மாணவர்களுக்கென வழங்கப்பட்ட அக்கட்டிடம் போதிய வசதியை கொண்டிராமையாலும், முஸ்லிம்களுக்கு இடையில் ஏற்பட்ட கல்வி,கலாசார விழிப்புணர்ச்சியின் காரணமாகவும் முஸ்லிம் மாணவர்களின் கலாசார பண்பாட்டு விழுமியங்களை பேணவேண்டிய அவசியத்தை சமூகத்தின் புத்திஜீவிகள் உணர்ந்தமைய்யாலும்  இப்பாடசாலைக்கென தனியானதொரு கானியைப்பெறும் முயற்சியில் ஈடுபட்டார்கள்.

இச்சந்தர்ப்பத்திலேயே 1962இல் இப்பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில்  கௌரவ பிரதிநிதியாக கலந்து கொண்ட ரத்தோட்டை தேர்தல் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் “சந்ரசேன முனவீர” ஊடாக பிரதம அதிதியாக கலந்து கொண்ட அப்போதைய கல்வி அமைச்சர் கலாநிதி பதியுத்தின் அவர்களிடமும் இப்பிரச்சினை முன்மொழியப்பட்டது.

                  அவர் இப்பிரதேச முஸ்லிம் பாடசாலைக்கு என நிலப்பரப்பொன்றை பெற்றுத்தருவதாக வாக்களித்த வேளை, அம்மேடையில் ஒரு பிரமுகராகவும், அன்று பென்விலா தோட்டமென்றும் இன்று குரிவெல என்றும் அழைக்கப்படும்.  இப்பிரதேசத்தில் பல ஏக்கர் நிலப்பரப்புகளுக்கு சொந்தக்காரராக இருந்த அல்ஹாஜ் எ.எச்.எம்.அப்துல் ஹமீட் அவர்கள்  தனது 3 ½ ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்குவதாக கூறி உடனடியாக அதனை நிறைவேற்றியும் வைத்தார்கள். இதனால் அதுவரை முஸ்லிம் மாணவர்கள் கற்று வந்த சிங்கள வித்யாலயத்திலிருந்த பிரத்தியேகக் கட்டிடம் அவர்களிடமே கையளிக்கப்பட 1965இல் அல்ஹாஜ் எ.எச்.எம். அப்துல் ஹமீட் அவர்களால் வழங்கப்பட்ட காணியில் குரிவெல முஸ்லிம் வித்யாலயம் ஆரம்பமானது.

இப்பாடசாலை நிலப்பரப்பு மஹிந்தராஜபக்ச வித்தியாலயத்தை ஒரு புற எல்லையாகவும் மகாவலிகங்கையின் கிளை நதியான சுது கங்கையை மறுபுற எல்லையாகவும் கொண்டு, சிங்கள வித்யாலயத்திலிருந்து நிந்தர  வேலியால் பிரிக்கப்பட்டதாக 3 ½ ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது இதுவே இன்றைய மா/ குரிவெல ஹமீதியா கல்லூரி தோற்றம் பெற்ற வரலாறு ஆகும். 

               1947.02.06 அன்று இரண்டு ஆசிரியர்களையும் 42 மாணவர்களையும் கொண்டு ஆரம்பமான இப்ப பாடசாலையில் முதல் அதிபராக அக்குரனையைச் சேர்ந்த எ.என். சாகுல் ஹமீட் அவர்களே விளங்கினார்கள். இருவருடங்களில் மாணவர் தொகை 175 ஆக உயர்வடைய இப்பாடசாலை கணிஷ்ட , இடைநிலை வகுப்புகள் கொண்டதாக வளர்ச்சி அடைந்தது.

                  1950.05.01 ஆம் திகதியிலிருந்து இப்பாடசாலையின் இரண்டாவது அதிபர் அல்லது தலைமை ஆசிரியராக  பேருவலை அழுத்கமையைச் சேர்ந்த எஸ். எல். அபுல் ஹஸன் அவர்கள் பொறுப்பேற்றார்கள். 1953.04.29 வரையான பாடசாலை வளர்ச்சிக்கு இவரது முயற்சி அடித்தளமாக அமைந்தது. இவரைத் தொடர்ந்து இறையடிழுதிய எம். சுப்பையா அவர்கள் தலைமையாசிரியராக பொறுப்பேற்று 1956.04.04 இல் எம். ஐ . ஜமால்தீன் என்பவர் தலைமையாசிரியராக வரும்வரை கடமை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.    

                    ஒரு மிதமான வளர்ச்சிப் போக்கினை கொண்டிருந்த இப்பாடசாலை1958.03.02 - 1963.02.28 வரை கடமை புரிந்த ஜனாப். எச்.எம்.பஷீர் அவர்களது காலத்திலேயே 1959 இல் கா.பொ.த (சா.த) வகுப்பு வரை தரமுயர்த்தப்பட்டது. இன்னும் இவரது காலத்தில்  தான் 1962 இல் மேற்படி இப்பாடசாலையின் ஆரம்ப வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளதட்கேட்ப  சிங்கள பாடசாலைக்கு அண்மையில் ஒரு பிரத்தியக் கட்டிடத்தில் இயங்கி வந்த இப்பாடசாலைக்கு அல்ஹாஜ் எ.எச்.எம்.அப்துல் ஹமீட் அவர்கள் 3 ½ ஏக்கர் நிலமொன்றை வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது. இவரது பணிக்கு பின் அடுத்த தலைமை ஆசிரியராக எ.எல்.அப்பாஸ் அவர்கள் 1963.03.01 தொடக்கம் 1964.03.20 வரை அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற 1964.03.25 மடவளையைச் சேர்ந்த யு. அப்துல் ஹஸன் அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார்.

                     அவரது காலப்பகுதியான 1965ஆம் ஆண்டிலேயே சிங்கள பாடசாலைக்கு அருகில் ஒரே ஒரு கட்டிடத்தில் இயங்கி வந்த எமது பாடசாலை தற்போது எம்பாடசாலை அமைந்துள்ள காணியில் கட்டிட வசதிகளுடன் இயங்கத்தொடங்க சிங்கள பாடசாலைக் கருகில்  முஸ்லிம் மானவர்களுக்கு வழங்கப்பட்ட கட்டிடம் அப்பாடசாலைக்கே திருப்பி கொடுக்கப்பட்டமையும் முக்கிய அம்சமாகும்.  1970.01.16 வரை கடமைப்புரிந்த இவ்வதிபரின் காலத்திலேயே முதன் முறையாக புலமைப்பரிசில் பரீட்சையிலும், கா.பொ.த (சா.த) பரீட்சையிலும்  மாணவர்கள் சித்திஅடையத் தொடங்கினார்கள்.

                     குறிப்பாக  இப்பாடசாலை வரலாற்றில் முதல் மாணவனாக யு.எல்.எம்.முபாரக் அவர்கள் இடம்பெறுவதோடு, இப்பாடசாலையிலிருந்து முதன் முதலாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவிகளாக எம்.எஸ். எல் சித்தி பர்ஹா அவர்களும் எ.சி. சித்தி அதவியா அவர்களும் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். அதேபோல்  இக்கல்லூரியிலிருந்து முதல் பல்கலைக்கழக வாய்ப்பைப் பெற்ற மாணவியாக ஜே.எ.என்.மலிஹா அவர்களும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளார்கள்.

                     1970 ஆம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்ற மடவயைச் சேர்ந்த ஜனாப் என். எம்.எம்.சாகிர் அவர்களது பெருமுயற்சியின் காரணமாக ஆசிரியர் விடுதியும், இன்னும் பாடசாலைக்கான கட்டட வசதிகளும் மேம்பாடடைந்தன. 1976 ஆம் ஆண்டு தொடக்கம் 1982 வரை இப்பாடசாலையின் அதிபர் பதவியைப் பெற்ற உடதலவின்னையைச் சேர்ந்த ஜனாப் ஐ.எல். முஸ்தபா அவர்களது காலத்தில் இப்பாடசாலையில் கட்டட வசதிகள் அதிகரிக்க தொடங்கின.

                       1982.10.5 இலிருந்து அதிபராக கே.எம்.எஸ்.எம். சல்சபீல் அவர்கள் ஒரு மாதம் கடமையாற்றிமை குறிப்பிடத்தக்கது. காரணம் இவரே இப்பாடசாலையின் கீதத்தையும் இயற்றியவர் என்பதலாகும். இவரைத் தொடர்ந்து 1982ல் இருந்து 1985 வரை கடமையாற்றிய ரைத்தலாவளையைச் சேர்ந்த மர்ஹூம் எஸ்.எல்.எ.ஹஸன் அவர்களது காலத்திலேயே பாடசாலைக்கு மின்சார வசதி பெறப்பட்டது. ஹஸன் அதிபருக்குப்பின் 1985.03.04 இலிருந்து 1987.09.25 வரை ஜனாப் எ.எ.ஜலில் என்பவரும் இவரையடுத்து ஒருமாதகால தற்காலிக அதிபராக மர்ஹூம் யு.எல்.எம்.கலீல் என்பவரும் பணியாற்றினர். 1987.10.12 - 1990.08.31 வரை அதிபராக இருந்த வரக்காமுறையைச் சேர்ந்த மர்ஹூம் எம். எச்.எல்.எம்.தாஹிர் அவர்கள் கடமையாற்றினார்கள். சமூக ஆர்வலர்களின் ஆதரவுடன் தற்போதைய நூல்நிலையக் கட்டிட வசதி பெற்றுக்கொள்ளப்பட்டதோடு அக்காலத்தின் மிகப்பெரிய குறைபாடாகவிருந்த தளபாட வசதிகளும் தேவைக்கதிகமாகவே பூர்த்தி செய்யப்பட்டமையை இவரது கால சிறப்பம்சங்களாகச் சுட்டிக்காட்டலாம். 

                எச்.எல்.எம்.தாஹிர் அவர்களின் சேவைக்காலத்தின் பின் ஒரு வருடத்திற்கும் குறைந்த காலம் தற்காலிக அதிபராக ஜனாப்  ஐ.எம். பாரிஸ் அவர்கள் கடமை புரிந்தார்கள். அக்காலத்தில் மாத்தளையில் நடைபெற்ற கல்வி அமைச்சின் நடமாடும் சேவை மூலம் இப்பாடசாலையின் கட்டிடப் பற்றாக்குறை தொடர்பாக எடுத்துரைக்கப்பட்டதன் விளைவாக எமது கல்லூரிக்கு உலக வங்கியின் உதவி நிதியத்தினுடாக தற்போது விஞ்ஞான ஆய்வு கூடமாகவும் அப்போதைய பல நோக்கு கட்டிட அறையாகவும் விளங்கிய பகுதிக்கான நிதியும் தற்போதைய பிரதான கட்டிடத்திற்கான நிதியும் ஒதுக்கப்பட்டமை ஈண்டு குறிப்பிடப்பட்டதாகும்.

                   இவ்வாறு ஆரம்ப வளர்ச்சிப்படிகளை எட்டிக் கொண்டிருந்த இப் பாடசாலையின் போக்கில் புதியதொரு வரலாற்று அத்தியாயத்தை தோற்றுவித்த அதிபராக 1991.03.05 அன்று பொறுப்பேற்று 2000.02.18 வரையில் கடமையாற்றிய மாருகொனையை சேர்ந்த  எஸ்.எம்.எம் தாஹிர் அவர்கள் விளங்கினார்கள். இவரது காலத்திலேயே இப் பாடசாலை பல முன்னேற்றங்களை அடைந்து கொண்டது. முதலில் குறிப்பிடுவதாயின் 2ம் தரத்தில் இருந்து இப்பாடசாலை தரம் 1C பாடசாலை ஆகவும் 1992 முஸ்லிம் மகாவித்தியாலயமாகவும் முன்னேற்றமடைந்தது. இன்னும் 1993 ஹமீதியா கல்லூரி எனவும் பெயர் மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும். அவை மட்டுமன்றி கா.பொ.த (சா.த) தரம் ,கலை, வர்த்தகம் மனையியல் ஆகிய பிரிவுகளும் ஆரம்பிக்கப்படமை இவ்வதிபர் கால இமாலய சாதனைகள் ஆகும்.

                         மேலும் உலக வங்கி நிதியத்தின் மூலம் அனுமதிக்கப்பட்ட பல நோக்கு கட்டிட அறை, பிரதான மண்டபம் ஆகியன நிர்மாணப் பணியில் பூர்த்தி நிலையை அடைந்தன. இன்னும் அன்றைய முஸ்லிம் காங்கிரசின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த மர்ஹூம்  புகார்தீன் ஹாஜியார் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி மூலம் தற்போதைய கணினி மண்டப கட்டிட நிர்மாணிக்கப்பட்டது. இன்றைய அதிபர் காரியாலயம், ஆசிரியர் ஓய்வரை என்பன அமைந்துள்ள கட்டிடங்களும் இவ்வதிப்பர் காலத்திலேயே நிர்மாணிக்கப்பட்டன. மாணவத் தலைவர் அணியும் ஒழுங்கமைக்கப்பட்டது. இவரது அயராத உழைப்பின் காரணமாகவே பௌதீக வளத்தில் மற்றுமன்றி 1991-1999 ஆண்டுக்குட்பட்ட காலத்தில் 41 மாணவர்கள் புலமைப்பறித்தில் பரீட்சையில் சித்திஅடைந்து அதில் 31 மாணவர்கள் உதவித்தொகையிணையும் பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இது போலவே கா.பொ.த (சா.த) ,கா.பொ.த (உ.த) பெறுபேற்றிலான  பல்கலைக்கழக நுழைவு போன்றவற்றிலும் பாரிய அடைவுகளை சந்தித்த காலப்பகுதியாக எஸ்.எம்.எம் தாஹிர் அவர்களது காலம் விளங்கியமை குரிவெல ஹமீதியா வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய காலகட்டம் ஆகும்.  இவருக்குப் பின் மீண்டும் ஒரு அதிபர் வரும் வரையில்  தற்காலிக அதிபராக ஐ.எம்.பாரிஸ் அவர்களே விளங்கினார்கள்.

                   2000.03.30 தொடங்கி 2002.12.15 வரையில் இக்கல்லூரி அதிபராக ஜனாப் எம். ஹனீபா அவர்கள் கடமை புரிந்துள்ளார்கள். அவரது காலத்திலேயே எஸ்.எம்.எம் தாஹிர் அதிபர் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இரு  மாடி கட்டிடத்தின் கீழ்மாடி பணிகள் பூர்த்தி அடைந்தமை குறிப்பிடத்தக்கதாகும். அக்கட்டிடம் 90x25 அளவுக்கு  அனுமதிக்கப்பட்டிருந்தமை 110x25 ஆக விசாலமாகி பூர்த்தி செய்தமை இவரது பெருமுயற்சியின் பலனாகும்.

                           2002.12.15 அன்றுடன் ஜனாப் எம். ஹனிபா அதிபர் அவர்கள் ஓய்வு பெற குரிவெல  கல்லூரி அதிபராக ஜனாப் ஆ .நூர் . முஹம்மட் அவர்கள் பொறுப்பேற்றார். ஒரு சிறந்த அதிபராக இன்றுவரை பேசப்படுபவரும் இவரது காலத்திலும் இக்கல்லூரி மிகச் சிறந்த இலக்குகளை நோக்கி செல்லப்பட்டுள்ளது என்பது முக்கிய அம்சமாகும். இப்பாடசாலையின் விளையாட்டு மைதான அபிவிருத்தி மைதானத்திற்கு தடையாக இருந்த பாரியமரம் ஒன்று வெற்றி அகற்றி மைதானத்தை சீர்செய்தமை, இரு மாடிக்  கட்டிடத்தின் மேல் பகுதியை பூரணப்படுத்தி, அதனை ஒரு வரவேற்பு மண்டபமாகவும் மாற்றியமைத்தமை இவரது சாதனைகலேயாகும். மலசலகூட புனர்நிர்மாணம் கட்டட வசதிகள் என புறவிருத்திகளில் மட்டுமின்றி நூல் நிலையத்திற்கு நூல்கள் பெற்றுக் கொடுத்தல், டெங்கு ஒழிப்பு திட்டம, பரீட்சை பெறுபேறுகளில் வளர்ச்சி, பல்கலைக்கழக நுழைவு வீத அதிகரிப்பு என இவரது காலம் ஒரு புரட்சிகரமான சேவைகள் நிறைந்ததாக அமைந்திருந்தது.

 இவர் 2008.11.12 அன்று இடமாற்றம் பெற்று மா/அஜ்மீர் தேசிய பாடசாலை அதிபராக சென்றதைத் தொடர்ந்து இப்பாடசாலையை தாங்கிப் பிடித்தவராக ஜனாப் ஐ.எம் பாரிஸ் அவர்கள் மீண்டும் அதிபராக பொறுப்பேற்று 2010 வரை செய்யப்பட்டார்.

                    இவரைத் தொடர்ந்து இப்பாடசாலை அதிபராக 2010.07.23 அன்று  எம்.எஸ்.எம் ராசிக் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இவரது கால செயற்பாடுகள் இக்கல்லூரியின் அமைதி நிறைந்த ஆக்கபூர்வமான ஆரம்பத்திற்கு வித்திட்டதாக அமைந்திருந்தது. இவராலேயே ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான தற்காலிக கூடாரத்திற்கு கூரைமாற்றுதல், நிதாகுல்ஹைர பவுண்டேஷன் உதவியுடன் தொழுகை அறையை நிர்மாணித்தமை, ரூம் டு ரீட் கட்டிடம், உயர்தர வகுப்பு மாணவர் தற்காலிக வகுப்பறை, மலசலகூட வசதிகள், பாடசாலையின் உள்ளக நடைபாதை, சிறுவர் மைதானத்திற்கு மதில் அமைக்கும் திட்டம், ஒலிபெருக்கி வசதி மேம்பாடு, அதிபர் காரியாலய அபிவிருத்தி ,ஆசிரியர் விடுதி புனர்நிர்மாணம் என பல்வேறு ஆக்க பணிகளில் அயராது ஈடுபட்ட அதிபராக எம் .எஸ். எம் ராசிக் அவர்கள் செயலாற்றி உள்ளார்கள். இவரால் பாடசாலையின் பௌதிகவளம் மேம்பாடு மாத்திரமின்றி கல்வி அபிவிருத்தி செயல்பாட்டிலும் ஆர்வமாக முன்னெடுக்கப்பட்டதன் மூலமும் இப்பாடசாலை பெறுப்பேற்று வரலாற்றிலும் பாரிய அடைவுக்கான சந்தர்ப்பம் கிட்டியது. இவ்வதிப்பரின் காலத்தில் ஹமீதியா மாணவர்கள் ,ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூகம் ஆகிய அனைத்து தரப்பினரையும் திறம்பட தன் பக்கம் சேர்ப்பதில் ஆர்வம் காட்டியமை முக்கிய அம்சமாகும்.

                            எம்.எஸ்.எம் ராசிக் அதிபர் அவர்கள் கல்வி நிர்வாக சேவைப் பரீட்சையில் சித்தி அடைந்து கிழக்கு மாகாண உதவிக்கல்வி பணிப்பாளராக நியமனம் பெற்று சென்றதையடுத்து இப்பாடசாலையில் நீண்ட காலம் பல அதிபர்களின் கீழ் நிதி முகாமைத்துவ உதவியாளராகவும் பிரதி அதிபராகவும் பணிபுரிந்த கே.எம்.எம் பர்ஹான் அவர்கள் பதில் அதிபராக 2013.01.23  அன்று பொறுப்பில் அமர்த்தப்பட்டார். இவரது காலத்திலேயே  மா/ குரிவெல ஹமீதியா கல்லூரி  அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற (2013) மீலாத் விழா போட்டியில் அதிக முதலிடங்களை பெற்று முழு இலங்கையிலும் முதலிடம் பெற்ற பாடசாலையாக தேர்வு செய்யப்பட்டமை ஒரு வரலாற்றுச்  சாதனையாகும். அனைவரிடமும் மென்மையான போக்குடன் பழகும் இவ்வதிப்பர் 2014.02.10  வரையான குறுகிய காலப்பகுதியே பதவி வகித்திருந்தாலும் கல்வி,இணைப்பாடு விதமான செயல்பாடுகளில் அதிக கரிசனை எடுப்பவராக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.

                           இறுதியாக குரிவெல ஹமீதியா கல்லூரி வரலாற்றின் வளர்ச்சிப் படிகள் சாதனை பதிவேட்டில் தற்போதைய அதிபராக கடமையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாஸ் எஸ்.முகாஜீதின் அவர்களின் வருகையானது இப்பாடசாலையில் பதில் அதிபராகக் கடமையாற்றிய ஜனாஸ் கே.எம்.எம் பர்ஹான் அவர்களினால் அதிபர் சேவை சார்ந்த நிரந்தரமான ஒரு அதிபரின் தேவை உணரப்பட்டு அவரின் வேண்டுதலுக்கு ஏற்ப கல்விதிணைக்கள  அதிகாரிகளினதும் பாடசாலை அபிவிருத்தி குழுவினரதும் முயற்சியால் அஜ்மீர் தேசிய பாடசாலையின் பிரதி அதிபராகவும், அல்மினா ஆரம்பப் பாடசாலையின் அதிபராகவும் சுமார் நான்கு  வருடங்களுக்கு மேல் கடமையாற்றிய ஜனாஸ் எஸ்.முகாஜீதின் அவர்கள் மத்திய மாகாண கல்விச் செயலாளரினால்   மா/குரிவெல ஹமீதியா கல்லூரி அதிபராக  நியமிக்கப்பட்டு 2014.02.10  ஆம்  திகதி தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

                            இவரது பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கும் இக்காலத்தில் பாடசாலை அபிவிருத்தி சங்கக் குழுவினதும், பழைய மாணவர் சங்கத்தினதும், ஆசிரியர் குலாத்தினதும் பரிபூரணமான ஒத்துழைப்புடன் பாடசாலை உள்விவகாரங்கள் மறுசீரமைக்கப்பட்டு கற்றல் கற்பித்தல் ,பௌதீக தேவைகள் இனங்காணப்பட்டு கல்வி, பௌதீக அபிவிருத்திகள் ஒழுங்கமைக்கப்பட்டு ஒரு சிறந்த நிலைக்கு பாடசாலை இட்டுச் செல்லப்பட்டதுடன் பாடசாலைக்கு உதவி செய்ய முன்வந்த  கொடைவள்ளல் அவர்களின் 110x25 அளவிலான “உசைன் ஞாபகார்த்த கட்டிடம்” பெற்றுக் கொள்ளப்பட்டிருப்பதும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரதும், இவ்வதிபரின் அர்ப்பணிப்புடனான சேவையினாலயே என்பது முக்கிய அம்சமாகும் இன்னும் இவ்வதிபரின் முயற்சியால் விளையாட்டு மைதான பார்வையாளர் மண்டபம் , மலசல கூடத்தொகுதிகள் கட்டடப்பட்டுள்ளதோடு கா.பொ.த (சா.த) மாணவர்களுக்கான மேலதிக செயற்றிட்ட வகுப்புகள், புலமைபரிசிள் வகுப்புகள், வாசிப்பு கூடாரம் என்பவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றமை, எதிர்காலத்திலும் இப்பாடசாலை வெற்றிச் சிகரங்களை எட்டித் தொடும் என்பதை கட்டியம் கூறுவதாக அமைந்துள்ளது.

                                இத்தகையதொரு நீண்ட வரலாற்றை கொண்டு இன்னும் இன்னும் ஏராளமான கல்விமான்களையும், சமூக ஆர்வலர்களையும் உருவாக்கும் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கும் இப்பாடசாலையின் இத்தனை வெற்றிகளுக்குப் பின்னே பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் ,அதிபர்களும் ,ஆசிரியர்களும் ,பழைய மாணவர்களும் பக்கபலமாக இருந்து வந்துள்ளமை இங்கு ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். இப்பாடசாலை வளர்ச்சி வரலாற்றின் பேசப்படும் நிகழ்வாக இவ்வருடம் திறந்து வைக்கப்பட்டுள்ள கட்டிடமும் பாடசாலை அபிவிருத்திக் குழுவும்  குறிப்பாக ஜனாப் எஸ்.எம் கலீல் ஹாஜியார், ஹாஜியாணி ஹுதைபியா ( மனைவி) மற்றும் அவரது குடும்பத்தினரும் வழங்கிய அயராது உழைப்பினாலும் அல்லாஹ்வின் அருளாலும் கிடைத்த பெரும் பேரையெனில் அது மிகப் பொருத்தமாகும்.  இவ் வரலாற்றுத் தொடரின் இறுதியாக இப்பாடசாலையின் வெற்றிக்காக உழைக்கும் அதிபர், ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,ஆர்வலர்கள் அனைவர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் இன்னும் தொடர காத்திருக்கும் இக்கல்லூரி வரலாற்று தகவல்கள் காணப்படக்கூடிய குறைகளை பொறுத்து எதிர்கால வரலாற்று சிறப்பு அமைய வழி காட்டுமாறு வேண்டி நிறைவு பெறுகிறது.